Sunday, December 19, 2010

முஹல்லாவில் நவோதயா

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

புதிய கல்விக் கொள்கையையட்டி 1986ல் நவோதயா பள்ளி மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் தரமான கல்வி வலியுறுத்தி தேசியப் பார்வையுடன் மாணவர்களை தயாரிப்பதே நோக்கம். மத்திய அரசு குழு நிதி சுமையை ஏற்றது. மாணவர்கள், மாணவிகள் தங்கி படிக்கலாம். மனிதவள துறையின் கீழ் சுயாட்சி நிறுவனம் மேற்பார்வையிடும். தமிழ்நாடு நவோதயாவை நிராகரித்தது. 25 ஏக்கர் நிலம் மாநில அரசால் வழங்கப்படவில்லை. இந்தி மொழி கட்டாயப் பாடம். கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு ஒப்புதலளிக்கிறது. தமிழக மாணவர்களுக்கு தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள் சங்க இலக்கியம் புரியாது. ஆங்கிலம் சரளமாகப் பேச எழுதத் தெரியாது. இந்தி மொழியை வெறுத்ததால் வடபுல தொடர்பும், ஆதிக்கமும் அற்றுப் போனது. இன்று வடநாட்டு தொழிலதிபர்கள், கூலியாளர்கள் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை, உட்பட நகரங்களை, மாவட்ட தலைமையிடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஐந்து, ஆறு அடுக்கு, 10 அடுக்கு கட்டிட உரிமையாளர்களின் பெயர்களைப் பார்த்தால் புரியும். 100 கோடி ரூபாய் தொழில் வருமானம் ஈட்டும் தமிழ்நாடு வணிக நிறுவன உரிமையாளர், பங்குதாரர் பெயர் பட்டியலை மாநில, தமிழ் விரும்பும் அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். செம்மொழி கூப்பாடு புதிய மார்வாடி எழுச்சியை உண்டாக்கிய ரகசியம் பச்சைத் தமிழர்களுக்குத் தெரியவரும். முஸ்லிம் முஹல்லாக்கள் கல்வியில் நலிவடைந்துள்ளன. மத்திய அரசு தாராள நிதியுதவியுடன் துவக்கும் மூன்று மொழிக் கொள்கை நவோதயா பள்ளிக்கூடங்கள் முஸ்லிம் பகுதியில் உருவாக வேண்டும். மாநில அரசு வறட்டுப் பிடிவாதம் பாராமல் உடன் அனுமதி வழங்க முன்வர வேண்டும். தரமான அகில இந்தியக் கல்வி சிறுபான்மையினருக்குக் கிடைக்கும். வாழ்வு பிரகாசமடையும். 1992ல் பிரதமர் நரசிம்மராவ் அறிவித்த உலகமயமாக்கல், வடநாடு தென்னாடு பிரிவினையை ஒழித்தது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ளன. பீகார், ஒரிசா போன்ற பின்தங்கிய மாநிலங்களின் உழைக்கும் வர்க்கம் தமிழகத் தொழில் வளர்ச்சியை பயன்படுத்தி வளருகிறது. திராவிடக் கட்சி நிர்வாகிகளின் பேரன், பேத்திகள் இந்தி மொழி கற்றுள்ளனர். தமிழர்களுக்கு குறிப்பாக கிராமப்புறத்தவர்களுக்கு இந்திமொழி கற்கும் உரிமை 45 ஆண்டுகளாக மறுக்கப்படுகிறது. மத்திய அரசு இந்தி மொழியை ஆதரிக்கிறது. வளர்கிறது. 1965ல் இருந்த மொழி வெறி இன்று தமிழகத்தில் இல்லை. அரசியல் கூட்டணி இந்தி மொழி வெறியை தணித்துள்ளது. இந்தி தலைவர்களின் அருள், நெருக்கம், ஆசியுடன் தமிழகத் தலைவர்கள் பெரும் பணம், மீடியா வலிமை, தொழில் வளம் கொழுத்துள்ளனர். நவோதயா இந்தி பள்ளிக்கூடத்தை தடுத்து நிறுத்த, கண்டிக்க, ஒதுக்க, புறக்கணிக்க தமிழகத் தலைவர்களுக்கு எவ்வித அருகதையுமில்லை. குறைந்தபட்சம் முஸ்லிம்கள் பயனடையுமாறு முஹல்லாவில் நவோதயாவை அனுமதிக்க வேண்டும்.

நவீன ஹைதரபாத்

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

பாரதநாட்டின் அடிப்படைக் கட்டமைப்பில் ஆன்மீகம், இறையியல் பங்கு தவிர்க்க இயலாதது. பாக்கிஸ்தான் ஆன்மீக பாடல் கலைக் குழு ஹைதராபாத் நகருக்கு வருகை தந்தது. இறை வல்லமை, இறைவனுக்கும் மனிதனுக்குமான நெருக்கம், உலகின் நிலையாமை, யாக்கை அழிவு, ஆன்ம ஒழுக்கம் ததும்பும் பாடல்கள். இரைச்சல் தரும் ஆங்கில, மேற்கத்திய இசைக் கருவிகள் எதுவுமில்லை. ஒன்றிரெண்டு பாரம்பரிய எளிய, மண்ணுக்கேற்ற இசைக்கருவிகள்.
ஆன்மா, இதயம் உயிர்த்தெழும் இலக்கிய வரிகள். உருது மொழிக்கே உரிய செம்மொழி முதன்மை பண்புகள், சொல்லாடல்கள். உலகின் எந்த மொழியிலும் மாற்ற இயலா, பெயர்க்க முடியாத திமிர்த்தன இலக்கிய ஆளுமை. கஜல், கவ்வால், நாத், கீத், ஷமா, கானா மூவாயிரம் ரூபாய் நுழைவு கட்டணம் உருது மொழியின் ஆதிக்கத்துக்கு சான்று. பார்வையாளர்களில் இந்துக்கள் பெரும்பான்மை. நபிகளாரின் புனிதம் பலபாடல்களின் மையக்கருத்து. புர்கா பெண்கள் குடும்பத்துடன் அவையை நிறைத்தனர். நாட்டு எல்லை, தேசப் பிரிவினை, மொழிப் புலமையின் முன் மறைந்தது. திறமை, ஆர்வம், இலக்கிய ரசனை மனிதப் பண்பு மட்டுமே அரங்கத்தில் கோலோச்சியது. ஆந்திரப் பிரதேசம் நிறுவப்பட்ட நாள், மாநில முதல்வர் 35,000 கோடி ரூபாய் ஆண்டு அந்நிய முதலீடு பெருமை மிகு விளம்பரம் நாளிதழ்களில். இன்னும் 40,000 கோடி ரூபாய் சில வாரங்களில் வந்து சேரும்.

தென்னிந்தியாவின் மக்கள் அடர்த்திமிகு நகரம் ஹைதராபாத். 1591ல் முஹம்மது குலிகுதுப் மூசி ஆற்றின் கரையில் உருவாக்கிய நகரம் பாக்ய நகரம் எனவும் வரலாற்றில் புகழப்படுகிறது. 650 கி.மீ-. பரப்பில் 63 லட்சம் மக்களை வாழவைக்கிறது. 55 சதவீதம் இந்துக்கள், 41 சதவீதம் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்களும் மன நிறைவுடன் காலங்கழிக்கின்றனர். ஹைதராபாத் பகுதியில் தீவிரவாதி தலைமறைவு, வெடிகுண்டு புதையல் கண்டுபிடிப்பு பொய்ச்செய்திகள், அவதூறு தகவல்கள் தொடர்ந்து ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது வாடிக்கை. ஆனால் பாக்கிஸ்தான் ஆன்மநேய கலைக்குழுவின் ஹைதராபாத் நிகழ்ச்சியை ஆங்கில நாளிதழ்கள் மனமார பாராட்டின. நேர்காணல் வெளியிடப்பட்டது. தகவல் தொழில் நுட்பம், மருந்து தொழிற்சாலை, நுண்கருவிகள், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பூரண அமைதி நகரமாக வளாகங்கள் உருவாகின்றன. இந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கு ஹைதராபாத் சிறந்த முன்னுதாரணம். பாக்கிஸ்தான் என்றாலே அருவெறுப்பு, அராஜகம், தீவிரவாதம், பயங்கரவாதம், ராணுவ வெறி, ஆயுதக் கலாச்சாரம், முரட்டு மதவாதம் பொய் புனைவு கற்பனைக்கு ஹைதராபாத் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இலக்கியம், மொழி, மேற்கத்திய மறுப்பு, மண்ணுக்கேற்ற இசை, ஆன்மீகப் பண்புகளை ஹைதராபாத் வாசிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் வாழும் 30 லட்ச முஸ்லிம்கள் மத நல்லிணக்கக் காவலர்கள். மறுப்பதற்கில்லை. நவீன இந்தியாவின் முன்னுதாரணக் குடிகள்.

கழிவு நீர் பாரம்பரியம்!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

கங்கை புனித நதியாக இந்தியாவில் மதிப்பு பெறுகிறது. என்றாலும் கழிவு அகற்றலுக்கு நிதி மத்திய அரசு செலவழிக்கிறது. 65 சதவீதம் மாசடைந்த நகரக் கழிவு ஆற்றில் கொட்டப்படுகிறது. புனித பயணிகள் ஆற்றை மாசுபடுத்துகின்றனர். புனித தலங்களில், நீராடும் படித்துறைகளில் மலக்கிருமிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 1995ல் (ழிமிஸிசிறி) துவக்கப்பட்டது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், 2100 கோடி ரூபாய் மாசு அகற்ற நிதி ஒதுக்கப்பட்டது. 20 மாநிலங்களில், 164 நகரங்கள் பயனடைகின்றன. நாட்டின் கூடுதல் கழிவுநீர் நாளன்றுக்கு 4000 கோடி லிட்டர். சுத்திகரிக்க 33,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நகர விரிவாக்கம் ஏற்படுத்திய விபரீதம். பெரும்பாலான நகரங்கள் குடிநீர் பராமரிப்பில் 70 சதவீதத்தை மின் கட்டணத்துக்கு செலவிடுகின்றனர். நீண்ட நீர் விநியோகக் குழாய்கள் குடிநீரை கசியச் செய்து வீணடிக்கின்றன. 50 சதவீத அரிய குடிநீர் இதனால் நாசமடைகிறது. பாரம்பரிய, பழைய காலத்து நீர் கட்டுமானங்கள், முறை மிகச் சிறந்தது என திட்டக் கமிஷன் வலியுறுத்துகிறது. குளம், குட்டை, ஏரி, தரை வழி நீர் பரப்பு, ஆறு ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் தீவிரமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. அரசு அறிக்கைகள் நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர் வடித்து பசப்புகின்றன. இரட்டை வேடம் புனைகின்றன. நகரமயமாக்கல் முதலிடம் ஒரு புறம். இன்னொரு வடிவத்தில் நிலத்தடி நீர் பராமரிப்பு கோமாளிக் கூத்துகள். மழை நீர் சேகரிப்பு வெற்று அறிக்கை, வலியுறுத்தும் அரசு சிமெண்ட் சாலை, கட்டிடம், வளாகம் ஆர்வம் காட்டுவது ஏமாற்றுவித்தை.
வீடுகளில் பயன்படும் நீர் 80 சதவீதம் கழிவு நீராக அபாயம் தருகிறது. மாநிலத்தில் 300 கோடி லிட்டர் கழிவு நீரை தினமும் சுத்திகரிக்க வேண்டும். இப்போது, பெரும்பாலும்¢ கழிவு, கழிவு நீர், மாசடைந்த பயன்படுத்தப்பட்ட நீர் ஏதேனும் ஆற்றில் கொட்டப்படுகிறது. புதிய நிலத்தடி நீர் சுரண்டல், தோண்டியெடுப்பு குறையவேண்டும். சர்வதேச நடைமுறை இது. ராட்சத மோட்டார் மின் கருவி மூலம் நிலத்தடி நீரை வரைமுறையின்றி வெளியேற்றுவது ஆபத்து. மறு சுழற்சிமுறை, மறுபயன்பாடு, கழிவு சுத்திகரிப்பு நிலையம் கவனத்தில் தேவை. சிங்கப்பூரில் புதிய நீர் பயன், தேவை முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலகங்களில் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்பெறுகின்றனர். நமது மண்ணில் 20 சதவீத கழிவுநீர் மட்டுமே சுத்தமடைகிறது. ஆறு மாசு தடுப்பு திட்டம் பலகோடி ரூபாய்களை விழுங்கிய பின் படுதோல்வியில் முடியப் போகிறது. 1951&56 ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாய் கிராமக் குடிநீருக்கு செலவிடப்பட்டது. 2007&12 நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் 90,000 கோடி ரூபாய் குடிநீருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டக்கமிஷன் இடைக்கால அறிக்கை புதிய வெளிச்சத்தை, தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது வளர்ச்சிக்கு அறிகுறி. நிர்வாக அதிகாரிகள், அரசியல் கூட்டுக் கொள்கையில் இது 40 சதவீதம் சுரண்டல், லஞ்சம், ஊழல், அலட்சியத்துக்கு போய்ச் சேருகிறது. குடிநீர் இணைப்புக் கட்டணம் சாதாரண குடிமகனுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. குடிநீர் விநியோக அலுவலர்களுக்கு கொட்டியழ வேண்டும். குடிநீரை விற்று பணம் கறந்து சொகுசு வாழ்க்கை நடத்தும் அதிகாரிகள், ஊழியர்கள் கழிவுநீர் பராமரிப்பில் என்றும் அக்கரை செலுத்தமாட்டார்கள்.

சிலை மறுப்பு தமிழ்

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

இறைவனுக்கு உருவமில்லை. இஸ்லாமிய மத தத்துவம் உறுதியானது. சிலை, சித்திரம் பார்வையை குறுகச் செய்யும். மொழி, தேசப் பற்று இரண்டுக்கும் இது நன்றாகவே பொருந்தும். சில மறுக்கும் முஸ்லிம் சமுதாயம் இறையச்சம், இறைமேலாண்மை, இறைவன் ஆதிக்கம், இறை சடங்குகளில் பின்தங்கவில்லை. மாறாக, அதிகபட்ச மூர்க்கத்துடன், கொள்கை வெறியுடன், சமரசம் பண்ண இயலா தனித்தன்மையுடன் இறைவனை வலியுறுத்துவதில் முன்னணியில் நிற்கிறது. இறைபக்தி என்றால் நேர்மை, எளிமை, தூய்மை வாழ்வியல் விரிவு காணலாம். இறைவனை மறுக்கும், புறக்கணிக்கும் நாத்திகவாதிகள் பகுத்தறிவாதிகள், பொதுவுடைமைவாதிகள் சிலைகளை ஒதுக்குவதில்லை. சற்றேறக் குறைய வழிபாட்டுக்கு இணையாக சிலைகளை போற்றி கொண்டாடுகின்றனர். அறிவின் வீழ்ச்சி, கொள்கை நழுவலாக இதனை கருத வேண்டியுள்ளது. தலைவர் சிலை சேதம் மனித உயிரை பறிக்கிறது. தலைவர் மீதான பின்பற்றுதல், கொள்கை வாரிசுதன்மை எடுபட்டு போய் வெறுப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு இனம், சாதிக்கும் ஒரு தலைவர் சிலை மனித பண்புகளை சிதைக்கிறது. நிரந்தர பகை, சினம், ஆத்திரம், வம்பு, வழக்கு, அடிதடி, கொலைபழி நீடிக்கிறது. மக்கள் வாழும் பகுதி அனுமதி இழக்கிறது. சிலை நிற்கிறது. மனிதம் மடிகிறது.
மதம், தேசம், மொழி வளர்ச்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆங்காங்கே சேவையாளர்கள், பெருந் தொண்டர்கள், பேரறிவாளர்கள் தோன்றி பணி செய்கின்றனர். மடிந்து மண்ணுக்குள் புதைகின்றனர். உத்தமர்களின் உபதேசம் மட்டுமே இனி வழிகாட்டி. அவசரகதியில் சிலை வடித்து நகரங்களை, வாழ்விடங்களை, அங்காடி பகுதிகளை ஆக்கிரமிப்பதால் கொள்கை உயரப் போவதில்லை. மாற்றார் மதிக்கப் போவதில்லை. சிலைகள் புனிதமாகி காவல்துறை மக்கள் வரி பணம், மின் ஒளி, விளக்கு அலங்காரம் நாடு முழுக்க கோடி கோடி ரூபாய்களை பாழடிக்கிறது. சமீப காலமாக, மொழி வளர்ச்சியில் அதிகமாக சிலை பங்கேற்கிறது. சென்னையில் உலகத்தமிழ் மாநாடு 1967ல் நடைபெற்றது. உலகின் இரண்டாவது அழகிய கடற்கரையில் பழம்புலவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. தமிழன்னை உருவம் கற்பிக்கப்பட்டது. குமரி முனையில் உயரமான திருவள்ளுவர் சிலை தமிழை ஒருக்காலும் பரப்ப போவதில்லை. சிலைபராமரிப்பு, ஆண்டுக்கு ஒருமுறை சடங்குத்தன மரியாதை மனித நாகரீகத்தை அழுக்காக்கிறது. பல நூற்றாண்டுகள் முன்னர் உயர்வாழ்வு தந்த பெரியோரை யாரும் பார்த்ததில்லை. கற்பனை செய்து உருவம் தந்து சிலை வடிவமைப்பது, சிற்பியை பாராட்டி பொற்கிழி வழங்குவது மன்னிக்க முடியாத வரலாற்று துரோகம். தமிழ் நாட்டில் தமிழ்மொழி சிதைவுக்கு சிலைகள் ஒரு காரணம். சிலை மறுப்பு தமிழ் குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சிலை மறுத்தல், ஒழித்தல், ஒதுக்குதல், துடைத்தல் நவீன தமிழகம் காணும் கனவு.

அரசு ஊழியம் அசட்டுத்தனம்!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

ராணுவ வீரர்கள் நாட்டின் வெளிப்புறத்தை பாதுகாக்கின்றனர். 24 மணி நேரம் பனிமலை, பாலைவனம், நடுக்கடல் விழிப்புடன் பணி செய்கின்றனர். பணி இடம் அருகே குடிலை, இருப்பை அமைத்துக் கொள்கின்றனர். ஆறுகோடி தமிழர்களின் நிர்வாகத்தை அரசு ஊழியம் உள்நாட்டில் பொறுப்பேற்கிறது. பத்து லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களை நம்பி அரசு பட்ஜெட் பணத்தை ஒப்படைக்கிறது. 60 தமிழர்களுக்கு ஒரு அரசு ஊழியர் நியமனமாகிறார். அமைச்சர்கள் பதவி இலாகா துறைமாற்றப்படுகிறது. வன இலாகா மந்திரி திடீரென்று ஒரு நாளில் தகவல் தொழிநுட்ப அமைச்சராகிறார். பிற்பட்டோர் மந்திரி மருத்துவத்துறையை ஆட்டிப்படைக்கிறார். பெட்ரோல் அமைச்சர் நள்ளிரவில் பஞ்சாயத்து துறையில் அமர்த்தப்படுகிறார். அமைச்சர் பதவிக்கும் பல்கலைக்கழகப் பட்டத்துக்கும் துறை நிபுணத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அரசு ஊழியம் என்பது மட்டுமே இங்கு அடிப்படை விதி. பொதுநலன் இறுதி எதிர்பார்ப்பு. அரசு ஊழியர் துறை இலாகா மாற்றப்பட வேண்டும். குத்தகை, உரிமையாளர், ஓனர் போல சீட்டை ஆக்கிரமிக்கக்கூடாது. எத்தகைய பொது அறிவும் இல்லாமல் ஒருவர் அரசு ஊழியராகிறார். புற்றீசல் போல பெருகியுள்ள, ஏதேனும் ஒரு மரத்தடி கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு தேவை. அவ்வளவுதான். கோடி ரூபாய் அதிகாரம், அரசு நிர்வாகம், பணம் இவரிடம் தஞ்சம்.
60 தமிழர்களின் சாலை, கல்வி, போக்குவரத்து, சாதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், உணவு பங்கீடு, குடிநீர் வரி, நிலவரி, கட்டிட அனுமதி, வணிக ஒப்புதல் கடன், கடை பெர்மிட் அனைத்தும் ஒரு அரசு ஊழியர் காலடியில். ஒவ்வொரு தமிழரும் மண்டியிட்டு பிச்சை கேட்டு, மடியேற்றி, சரிசெய்து, நன்கு கவனித்து, எப்படியாவது குஷிப்படுத்தி, திருப்தி செய்து தமது வாழ்வியல் நலன்களுக்கு அரசு ஊழியரிடம் காவடி தூக்க வேண்டும். துறையில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை, பட்ஜெட் நிதி, செலவழிக்கப்பட்ட தொகை, அமைச்சர் பெயர், முதன்மை செயலாளர் பெயர், பட்டம், கல்வி தகுதி, திறன், சுற்றுப்பயண விவரம் எதுவும் ஓர் அரசு ஊழியருக்கு தெரியாது. தெரிய வேண்டிய, எவ்வித அவசியமில்லை. 30 நாட்கள் ஓடினால் முழுசம்பளம். தனியார் துறை ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றனர். கோப்புகளை பந்தாடும் தகுதி, காலம் கடத்தும் திறமை மட்டும் அரசு ஊழியருக்கு போதுமானவை. பணி செய்யும் இடம், பகுதி அருகில் அரசு ஊழியர் வசிப்பதில்லை. தனது வீட்டுக்கருகே பணியிடம், அலுவலகம் கோறுகிறார். இதனால் அரசு நிதி பாழாகிறது. சில மாவட்டங்களில், தாலுகாக்களில் அளவுக்கதிகமாக அரசு ஊழியர்கள். இன்னும் சில மாவட்டங்களில் எதிர்மறை நிலை. அரசாங்கத்தின் பிடியில், காலடியில் பொதுமக்களின் கழுத்து சிக்கியிருப்பதால் தமிழர்களின் வாழ்வு தடுமாறுகிறது. அரசு ஊழியரின் கையெழுத்தை பெறாமல் ஒரு சான்றிதழையும் காணமுடியாது. வரவு தடுக்கப்படும். காரணமின்றி கோப்புகளை இழுத்தடிக்கும் அரசு ஊழியரை டிஸ்மிஸ் பணிரத்து செய்யவேண்டும். 8000 ரூபாய் மாதம் வைப்பு நிதி (நிறிதி) செலுத்தும் ஊழியரின் வீடுகளை ரெய்டு வரிசோதனை செய்யலாம். தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் வசதிகளை மட்டும் அனுபவிக்கும் அரசு ஊழியம் தொடர் கண்காணிப்புக்குள்ளாக வேண்டும்.

வெளிநாட்டு மோகம் தேவையில்லை!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
கோழை உதவாக்கரையாய் நாம் அமெரிக்காவுடன் ஓடுகிறோம். அவர்களின் சாதனை, பெருமை, நிர்வாகம் குறித்து புகழ்கிறோம். நியூயார்க் நகரம் பொருளாதாரம் சிக்கலில் வாழ, சிக்கி, சரிவு கண்டது. உடன் இங்கிலாந்து ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் அனுபவித்ததும், அடுத்த விமானத்தில் அரபு நாடு பறக்கிறோம். வளைகுடா பகுதியில் போர் மூண்டதும் காப்பாற்றுமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இந்தியாவுக்கு திரும்ப அழைக்குமாறு வேண்டுகிறோம். முடிந்த அளவு, ஒவ்வொருவரும் நாட்டை திட்டுகிறோம். நாட்டு அமைப்பை சீர்திருத்த ஒருவரும் தயாராயில்லை. நமது மனச்சாட்சியை பணத்திடம் அடகு வைத்துள்ளோம். யாரேனும் ஒருவர் தொலைதூரத்திலிருந்து வந்து நாட்டை சுத்தப்படுத்துவார். அதிசய தொடப்பம் கொண்டுவரட்டும் என எதிர்பார்க்கிறோம். பம்பாய் நகராட்சி ஆணையர் தினைகர் ஒருமுறை கூறினார். விலைமதிக்க முடியாத கழிவை வெளியில் தள்ள பணக்கார நாய்கள் வீதியில் உலா வருகின்றன. கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கின்றன. நாய் மலம் தெருவில் கொட்டப்படுகிறது. இத்தகைய மேல்தட்டு படித்த வர்க்கம் நகரம் மாசு அடைவதாக புகார் கூறுகின்றனர். நடைபாதை சரியில்லை என அரசாங்கத்தை குறை காண்கின்றனர். நாய் வெளியில் செல்லும்போது ஒரு துடைப்பத்துடன் அழைத்துச் செல்லுங்கள். நகரம் சுத்தமாகும். அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் நாய் மலம், மூத்திரத்தை நாய் உரிமையாளர் வீதியில் அகற்றவேண்டும். அரசாங்கத்தை தேர்வு செய்ததும் நமது அனைத்து கடமைகளையும் பொறுப்புகளையும் தட்டி கழிக்கிறோம்.
மீடியா இழிவுகளை மட்டுமே படம் பிடிக்கிறது. நமது சாதனை, வலிமை, அங்கீகரிக்க இந்தியாவில் வாழும் நாம் சங்கடப்படுகிறோம். நமது நாடு பெரியது. பாராட்டத்தக்க பல பெருமைகள் நமக்குண்டு. பால் உற்பத்தியில் உலகில் முதலிடம். தொலைதூர விண்கல இயக்கத்தில் (ஸி.ஷி.ஷி.) முதலிடம். கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடம். அரிசி விளைச்சலில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. தன்னிறைவு பெற்ற சுய ஆதிக்கமுள்ள பல கிராமங்களை தனிநபர் உழைப்பு சாதித்துள்ளது. பல லட்சம் உதாரணங்களை மீடியா புறக்கணிக்கிறது. கெட்ட செய்தி, தோல்வி, அழிவு மட்டுமே மீடியா காட்டுகிறது. டெல் அவிப் இஸ்ரேல் நகரில் நான் செய்தித்தாள்களை படித்தேன். முதல் நாள் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. குண்டு வெடிப்பு, சாவு, ரத்தக்களரி. என்றாலும் செய்திகளில் முதல் பக்கத்தில் யூத விவசாயி சாதனை வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் பாலைவனப் பகுதியை சோலைவன சாதனைப் படுத்தியுள்ளார். அனைவரையும் உந்தி உயரே தள்ளும் அனுபவம். அழிவு சாவு செய்திகள் உட்புறத்தில் இதர செய்திகளுடன் புதையுண்டு பிரசுரிக்கப்பட்டதை படித்தேன். வெளிநாட்டு டி.வி., சட்டை, தொழில்நுட்பம் மீது அதிக மோகம். இறக்குமதி சரக்கு மீது ஆர்வம் இந்தியர்களுக்கு அளவிடமுடியாது. தன்னிறைவு மட்டுமே சுயமரியாதை தரும். ஹைதராபாத் நகரில் சொற்பொழிவாற்ற நான் வந்தேன். 14 வயது சிறுமி வளர்ந்த இந்தியாவில் வாழ்வது எனது லட்சியம் என்று கூறினார். இந்தியா நலிந்த நாடல்ல. மிகப்பெரிய வளர்ந்த நாடு. ஆஸ்திரேலியா, நியூஜிலாந்தில் சாலையில் தேங்காய் உடைக்க முடியாது. துபையில் ரமலான் மாதம் உணவு சாப்பிட பகலில் அனுமதியில்லை. ஜித்தாவில் தலை மூடாமல் நடமாட முடியாது. மேலை நாடுகளில் குறிப்பிட்ட நேரத்துக்கும் மேல் கார் பார்க்கிங் ஆக்கிரமிக்க வழியில்லை. வாஷிங்டனில் 88 கி.மீ. மேல் வாகனம் ஓட்ட முடியாது.

ஹைதராபாத் நகரில் முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு ஏபிஜே அப்துல் கலாம் உரை.

பகிரங்க தூக்கு தேவை!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

தூக்கு தண்டனைக்கு எதிராக பலத்த வாதங்கள் படித்தவர் மத்தியில் எழுகிறது. பெருகி வரும் குற்றச் செயல்கள் காந்திய சிந்தனைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அகிம்சை, தூக்கு, சகிப்பு, மன்னிப்பு, ஆயுள் தண்டனை, காவல் நீடிப்பு, முன் ஜாமீன், பலவீன சாட்சி, பல்டியடித்த சாட்சி சொற்றொடர்கள் மீண்டும் புதிய அர்த்தம் பெற வேண்டும். சிறுமியை கற்பழித்துக் கொலை, கடத்தல் கொலை, கலவரக் கொலை, ஊர்மக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டிக் கொலை உயிர் பறிப்பு காட்சிகள் புதிய வழக்குகளின்¢ எண்ணிக்கையை மட்டும் உயர்த்துகின்றன. வழக்கறிஞர்களுக்கு நல்ல வசூல் வேட்டை. இதழ்கள், தனியார் ஊடகங்களுக்கு அதிக விளம்பர வரவு. உலகில் மிகப்பெரிய அரசியல் சட்டம். மூன்று ஆண்டுகள் சட்ட மாமேதை இரவு பகல் உழைத்து உருவாக்கியது. 100 ஓட்டைகள் சட்டத்திருத்தம் போர்வையில் ஆட்சியாளர்களின் ஆசைகள் அரங்கேற்றம். புதிய புதிய சட்டங்கள். நடைமுறைப்படுத்த ஒருவருக்கும் துணிவில்லை. தலைநகர் சென்ட்ரல், அண்ணா சாலை மத்திய, மக்கள் நடமாட்ட பகுதியில் பகிரங்க தூக்கு மேடை தேவைப்படுகிறது. ஆறுகோடி தமிழர்களின் அமைதி வாழ்வை ஆறாயிரம் குற்றவாளிகள் பறிக்கின்றனர். பணம் பெற்று கூலிக்கு கொலை செய்யும் கும்பல் கொழுத்து வளர்கிறது. நாகரீக சமுதாயம் வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம், அரசியல்வாதி, சட்டமன்றம், ஊடகம், காவல்துறை ஒவ்வொரு பிரிவும் அடுத்தவர் தலையில் பழியைப் போடுகின்றனர். மனித உயிரை இறைவன் படைத்தான். உயிர் பறிக்கும் அதிகாரம் மனிதனுக்கில்லை. மனிதரின் உயிரை பகிரங்கமாக வெட்டிச்சாய்க்கும் கொடூரவாதியை உயிருடன் நிம்மதியாக வாழ அனுமதிக்கக்கூடாது. மனித உரிமை காரியவாதிகள் பத்தாம்பசலித்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக கூச்சலிடுகின்றனர். தூக்குதண்டனை நடைமுறை செயல்படவேண்டும். இனிவேறு வழியில்லை. யார் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். சாட்சிகளை பலவீனப்படுத்தினால் போதும். நீதிமன்றச் செலவுகளை, ஸ்டேஷன் கவனிப்புகளை சமாளித்தால் போதும். எளிதில், சில வாரங்களில் அரவமின்றி காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, நிம்மதியாக நெஞ்சை நிமிர்த்தலாம். இன்றைய லஞ்ச, ஊழல் சூழ்நிலை மேன்மேலும் கொடூர குற்றவாளிக்கு சாதகமாக திகழ்கிறது. கொலையாளிகள் உடன் சில நாட்களில் தண்டிக்கப்பட வேண்டும். அமைதி விரும்பும் சராசரி மனிதர்களை காப்பாற்ற தூக்கு மேடை பயன்படும். நகரில் ஒரு சிலர் எளிதாக கொலை செய்து தப்பிப்பது, சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தில் கோழைகளை உருவாக்கும். வெறித்தன கொலைக்கு தூக்கு மட்டுமே சரியான பரிசு. மாதக்கணக்கில் வழக்கை நீடிப்பது, வாய்தா, சாட்சி பிதற்றல் தேவையேயில்லை. பொதுமக்கள் மத்தியில் வாரந்தோறும் பகிரங்கமாக நகரில் கொலையாளிகளை தூக்கிலிட, துடிதுடிக்கச் சாகடிக்க வேண்டும். தீயவர்களை கொல்வது எல்லா காலங்களிலும் நடைமுறைச் சித்தாந்தம்.
தமிழ்நாடு குற்றவியல் பட்டியல்
கொலை : 2006 & 1273, 2007 & 1521, 2008 & 1630, 2009 & 1644
சொத்துக்காக, பணத்துக்காக கொலை : 2004 –& 74, 2008 & 105, 2009 & 123
கொள்ளை : 2008 & 662, 2009 & 1144
வழிப்பறி : 2005 -& 437, 2008 & 3849, 2009 & 4221
கற்பழிப்பு : 2007 & 523, 2008 & 573, 2009 & 596

குற்றச்சாட்டுக் கட்டுரை!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

முஸ்லிம் பண்பு இருவகைப்படும் நன்மை ஏவுதல்; தீமை தடுத்தல். நல்ல பண்புகளை திணிப்பதால் பொல்லாங்கு வருவதில்லை. யாருடைய கோபம், பழி, எரிச்சல், கழுத்தறுப்பு எதிர்வராது. பத்து பைசா நட்டம் ஏற்படாது. 58 இஸ்லாமியப் பத்திரிகைகளில், இதழ்களில் பெரும்பாலானவை முதல் வகையை சேர்ந்தவை. சமுதாயம், புரவலர்களின் விரோதம் வராது. அனைவரின் ஆசிர்வாதம், புன்சிரிப்பு, துஆ, சில்லரை, பிரியாணி, வரவேற்பு எளிதில் இயல்பாக கிடைக்கும். அனுபவிக்கலாம். முன் நிபந்தனை உண்டு. சமுதாயத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. யாருடைய மனமும் புண்படக் கூடாது. மதவாதி, அரசியல்வாதி, பதவியாளர், வாசகர், வழிபாட்டுத்தல நிர்வாகி, செல்வந்தர், பாமரர், சமாதி காப்பாளர், தர்கா டிரஸ்டி ஆக அனைவரும் போற்றும் வண்ணம் கட்டுரை அமைவது, எழுதுவது மிக எளிய செயல். இறைமறை, பெரியோர் வாக்கு, நபிமொழி அடங்கிய தமிழ் நூல்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படுகின்றன. இவற்றில் 40 பக்கங்களை ஜெராக்ஸ் செய்து பிரஸ்காரரிடம் கொடுத்து ஞிஜிறி செய்யச் சொன்னால் போதும். பள்ளிவாசல் அல்லது தர்கா படம் முன் அட்டைக்கு உதவும். பத்திரிகை பெயரில் பைத்துல்மால் பணம், பொதுநிதி நாசமாகும். மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றம், நரகம், இறைக் கோபம் நிச்சயம். சில இதழ்களாவது உழைப்பில் வெளிவர வேண்டும். இதழியல் வளரும். வழிகாட்டும்.
சிறுபான்மை சமுதாயம் வேகமாக முன்னேறுவதற்கு தடைகள் போகிற போக்கில் எழுதப்படுகிறது. முஸ்லிம் விரோத அரசாங்கம், இந்துக்களுக்கு முக்கியத்துவம், ஆர்எஸ்எஸ் மனோபாவம், பிராமண ஆதிக்கம், வறுமை திணிப்பு, உரிமை மறுப்பு காரணங்கள் கடந்த 60 ஆண்டுகளாக, நாடு விடுதலைபெற்ற பின்னரும் மேற்கோள்காட்டப்பட்டன. சிறுபான்மை சமுதாய நோய், புற்று, சீழ், புண், பலவீனம் தொடர்ந்து மறைக்கப்பட்டது. 40,000 கோடி ரூபாய் வக்பு சொத்து முடக்கம், ஆடம்பர திருமணம், 30,000 கோடி ரூபாய் கல்வி நிறுவன குடும்ப ஆதிக்கம், இஸ்லாமிய இயக்க தீவிர குடுமிபிடி சண்டை, அரபு பணம் வரவு விசாரணை இருட்டடிக்கப்பட்டது. 40 லட்சம் தமிழக முஸ்லிம்களில் ஐந்து லட்சம் பேர் தீயவர்கள். இத்தகைய விஷமிகள், கொடூரமானவர்களின் ஆதிக்கத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தின் ஏளனத்துக்குள்ளாகிறது. இந்துக்கள் அருவெறுப்படைகின்றனர். சமுதாய வளர்ச்சிக்கு பெரும் இடையூறு விளைவிப்பவர்களை அடையாளம் காட்டுவது எழுத்தாளரின் முதல், மகத்தான, அவசிய, தவிர்க்க இயலா, சமூகக் கடமை. தனி நபர் அவதூறு, தாக்குதல், பரிகசிப்பு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கட்டுரைகளில் பிரசுரமாகியிருந்தால் எழுத்தாளர் நரகவாதி. சமுதாய உயர்வு குறித்த கண்ணீர், உழைப்பு, முனகல், கலக்கம், தகவல், புள்ளி விவரம், ஏக்கம், பெருமூச்சு, நிதானம், பொறுப்பு, போதாமை கட்டுரையில் அடிநாதம். இறையருள் பூரணமாக எழுத்தாளருக்கும் கிடைக்கும். மனம் திருந்தும் சமுதாயத்துக்கும் உண்டு. வதன் ஹவ்ன அனில் முன்கர் ‘‘அல்லவை விலக்கல்’’ தொடரும். மனத்தூய்மையுடன் வரவேற்போம். இறுதி இலக்கு, தமிழகத்தில் தன்னிறைவு பெற்ற சமுதாயம் உருவாகும்.

உருது மொழி எகத்தாளம்!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

இஸ்லாமியப் பிரச்சாரம் குர்ஆன், ஹதீஸ் மூலாதாரங்களின் விரிவு. அரபி மொழி தெரிந்தவர்கள் தமிழகத்தில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் தேறுவர். படிக்க, எழுத, மொழி பெயர்க்க ஆர்வம் குறைவு. குர்ஆன் அரபி மூலத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு விரிவுரை நடத்துவோர் ஆயிரம் பேர் எண்ணிக்கை அதிகமாகவே படுகிறது. தமிழகச் சூழலில் அரபி மொழி வளர்ச்சி வாய்ப்பு ஏதுமில்லை. ஐந்து லட்சம் முஸ்லிம்கள் அரபுலகத்தில் பத்தாண்டுகளுக்கும் அதிகமாக வாசம் செய்தாலும் அரபி மொழி பயிற்சிக்கு தமிழகத்தில் வித்திடவில்லை. தொழுகையில் அரபி வசனங்களை கிளிப்பிள்ளைத்தனமாக டேப்ரிக்கார்டர் பாணியில் ஓதுவதோடு அரபி மொழி தொடர்பு நின்றுவிடுகிறது. முப்பதாண்டு காலம் தொடர்ந்து குர்ஆன் விரிவுரை நேயர் பத்து வசனங்களுக்கு மொழி பெயர்ப்பு செய்ய தயங்குவார். அகில இந்திய அளவில் உருதுமொழி இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு கை கொடுக்கிறது. மத்திய, மாநில அரசுகள் வெறித்தனமாக உருது மொழியை நசுக்க, அழிக்க போதிய முயற்சிகள், தொடர்ந்து மேற்கொண்ட பின்னரும் இறையருளால் உருது மொழி உயிருடன் வாழ்கிறது. இந்தி மொழி பிரச்சாரம், வளர்ச்சிக்கு செலவிடும் தொகையில் 5 சதவீதம் உருது மொழிக்கு அரசு நிறுவனங்களால் செலவிடப்படுவதில்லை. நெடுநாளைய நவாப், முகலாய ட்ரஸ்ட்கள் தனி நபர் கொள்ளையர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் உருது மொழிக்கு நிதி திரட்ட இயலவில்லை.
இஸ்லாமிய மத உயிரோட்டத்துக்கு உருது மொழி மிகவும் இன்றியமையாதது. அகில இந்தியப் பார்வையை உருதுமொழி ஏற்படுத்தும். மக்கா, மதீனா இணைப்பு அன்றைய நாளில் மத வளர்ச்சிக்கு உதவியது. அதே பாணியில் வடநாட்டு தூய மொழியாளர்கள் இறையச்ச வாதிகள் மற்றும் தமிழக மதவாதிகள் இணக்கம், தொடர்பு, வாழ்வியலை உயர்தளத்துக்கு, சிந்தனைக்கு ஏற்றும். உருது மொழியின் சிறந்த கவிதைகள், படைப்புகள், இலக்கிய வடிவங்கள் தமிழருக்கு அறிமுகமாக வேண்டும். உருது மொழியில் ஒருமணி நேரம் நடைபெறும் சொற்பொழிவு தமிழகச் சூழலில் முழு, ஒருநாள் மாநாட்டு உரைக்குச் சமம். உருது மொழி அழிக்கவே முடியாத அளவுக்கு செழுமையாய் தனக்குத்தானே வளர்ந்து கொண்டும் வளர்த்துக் கொண்டுமுள்ளது. உருது மொழிக்கு இந்து முஸ்லிம் அடையாளம், வித்தியாசமெல்லாம் தெரியாது. புரியாது. அனைவரையும் வசீகரித்துள்ளது. உருது மொழிக்கு மிகப்பெரிய விரோதிகளாக மேல்தட்டு, சிவப்பு தோல், பாரம்பரிய கான்ந்தானி முஸ்லிம் கும்பல் திகழ்கின்றனர். இதர மொழி முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதனால் இடைக்காலத்தில் உருது மொழிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டது. 1965ல் தமிழகத்தில் வெறியூட்டப்பட்ட இந்தி எதிர்ப்பு, திசைமாறி உருது மொழியை காவு கொண்டது. ஆனால் இன்று திராவிட கட்சி, இயக்கம் மெல்ல மெல்ல ஆங்கில மோகத்தால் செத்து மடிகிறது. வாய்ப்பை பயன்படுத்தி, உருதுமொழி தமிழர் இணைப்புக்கு முஸ்லிம்கள் உதவிடவேண்டும். இதழியல், இஸ்லாமிய மத துறையில் பணிபுரிய விரும்புவோர் உருது மொழியை கற்கவேண்டும். வேறு வழியில்லை.

ஜனநாயக மறுப்பாளர்கள்!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
தமிழகத் தலைநகர் சென்னை சர்வதேச நகரங்களில் ஒன்று. தொடர்ச்சியாக கட்டப்பட்டு வரும் 10 மாடிக் குடியிருப்புகள், சந்து பொந்துகள், வீதிகளிலும் வானத்தை தொடும் அலுவலகங்கள் சாட்சி. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், மாலை ஆறுமணிக்கு மக்கள் பங்கேற்கும் கருத்தரங்கு விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நாட்டு நடப்பில் அக்கரையுள்ளோர் கூடி அரசுக்கு யோசனை கூறும் வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். மயிலாப்பூர் பகுதி சிறந்த முன்னுதாரண நிலையை தொடர்ந்து வகிக்கிறது. சீனிவாச சாஸ்திரி அரங்கம், இந்திய வாலிபர் சங்கம், பாரதிய வித்யா பவன், ராகசுதா மண்டபம் உட்பட அரைடஜன் வளாகங்கள் தீவிர பங்காற்றியுள்ளன. நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளர் முக்கால் மணி நேரம் தமது கருத்துரையை வழங்குவார். பழுத்த அனுபவசாலிகள், நிபுணர்களை நேரில் சந்திக்க, உரையாட வாய்ப்பு. எவ்வித பந்தா, போலித்தனம், கிளாமர் இன்றி நெருக்கம் காணலாம். ஐயம் போக்கலாம். கேள்விக் கணை தொடுக்கலாம். கருத்து மோதல் நிகழ்த்தலாம். பகிர்வு மட்டுமே முதன்மை. திரிபுகளுக்கு இடமில்லை. முரண்களுக்கு வாய்ப்புண்டு. ஜனநாயக மரபுடன் எதிர்வாதங்களை கூச்சமின்றி, விகாரமில்லாமல் நேரடியாக, பட்டவர்த்தனமாக, ஒலிவு மறைவின்றி அவையோர் முன் ஒலி பெருக்கியில் பேசலாம். பெரிய செலவு எதுவுமில்லை.
புதிய அறிவு அலை தமிழகத்தை ஆட்கொள்ள தயாராகிறது. ஒரு மனிதரை நடுநாயகமாக அமரவைத்து போற்றி பாடுவது இனி எடுபடாது. இவரை விட்டால் தமிழுக்கு ஆளில்லை. தமிழ்நாட்டுக்கு விமோசனமில்லை, ஜால்ரா தர்பாருக்கு முற்றுப்புள்ளி. அவையோரை முட்டாள்களாக, அப்பாவிகளாக, எதுவும் அறியாதவர்களாக பாவித்து உளறல் இனி நடக்காது. உரை நிகழ்த்துவோர், ஆடியன்ஸ் இருவரும் விஷயதாரிகள். சமமான ஞானவான்கள். இணையான பொறுப்பாளர்கள். ஒருவருக்கே அனைத்து சால்வைகளும், மாலைகளும், மதிப்பும், மரியாதையும் இனி தேவைப்படாது. மண், மக்கள் நலனில் அனைவருக்கும் பொறுப்புண்டு. கருத்துண்டு. உழைப்புமுண்டு. பகுத்தறிவுப் பூர்வமாக கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு போற்றி வந்த ‘‘மேடைக் கலாச்சாரம்’’ சரிந்து வீழ்கிறது. சில நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். மணிக் கணக்கில் அறுவை தேவையில்லை. புள்ளி விவரமின்றி பேசக்கூடாது. எல்லோரும் அவரவர் வாழ்வில், துறையில் பிசி; மூழ்கியுள்ளனர். புதிய கருத்துக்கள், விடுபட்ட கருத்துக்கள், உச்சக்கட்ட நடைமுறை யோசனைகள் மட்டும் செவியேற்கப்படும். யாருடைய நேரத்தையும் யாரும் வீணாக்கக்கூடாது. உலகமயமாக்கல் சூழலில் புதிய பாதைக்கு சென்னை மயிலாப்பூர் வழிகாட்டுகிறது. ஜனநாயக மறுப்பாளர்கள் மேடையை அலங்கரிக்க முடியாது. மீறி மேடையை ஆக்கிரமித்தால் பொதுமக்கள் எதிரில் அமரமாட்டார்கள். கூலி, பட்டாளம், கொத்தடிமை கொண்டு அவையை நிரப்பலாம். மதம், மொழி, மாநிலம், தேசம் வரை புதிய மேடை யுக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது.

இலவசத் தொலைக்காட்சி பயன்தருமா?

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

ஊடகம், மக்களுக்கு தகவல் தொடர்பில் சிறப்பான இணைப்பை ஏற்படுத்துகிறது. மாதம் நூறு ரூபாய் சந்தா கேபிள் இணைப்புக்கட்டணம், மின்செலவு, நேரம் வீணடிப்பு அன்றாட வாழ்வில் இடம்பிடிக்கிறது. ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாமல் டிவியை பயன்படுத்த இயலாது. தமிழகத் தனியார் தொலைக்காட்சி நிகழ்வுகள் அகில இந்தியத் தரம், சர்வதேசத் தரத்துடன் போட்டியிடும் தகுதியற்றவை. வெறுமனே இளம்பெண், வாலிபர் கூட்ட இடுப்பு ஒடியும் நடனம் மார்பு தொடு நடனம் தமிழர்களின் வாழ்வை எந்நாளும் உயர்த்தாது. 24 மணி நேரச் செய்தி சேவை அபத்தமானது. செய்தி சேகரிக்க, பரிமாற துணிவு தேவை. ஆளும் கட்சி ஜால்ரா, குற்றச்சாட்டு, பகை என செய்தி தடுமாறுகிறது. பரபரப்பு தேடி மீடியா அலைவதால் நம்பிக்கையிழக்க வேண்டியுள்ளது. மக்கள் கூடும் சகல, அனைத்து நிகழ்வுகளும் படம் பிடிக்கப்படுவதில்லை. நிருபருக்கு ஆர்வமுள்ள கூட்டம், மீடியா அதிபருக்குத் தேவையான நிகழ்வு மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. பணம் கொடுத்தால் செய்தியை சில நிருபர்கள் வலிந்து ஒளிபரப்புகின்றனர். ஒரே வகையான செய்தி இருபது சேனல்களில் சலிப்பின்றி 24 மணி நேரம் இடம்பிடிக்கிறது. 24 மணி நேர செய்தி சேகரிப்பு நடைபெறவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட செய்தியை திருப்பித் திருப்பி ஒளிபரப்புகின்றனர். பாமர மக்கள் இன்றைய தொலைக்காட்சி நிகழ்வுகளால் பெரிய பலனை பெற வாய்ப்பில்லை. சினிமா, நகைச்சுவை, வன்முறை சண்டைக் காட்சிகள் 24 மணி நேரமும் காணக் கிடைக்கிறது. இதனால் உழைப்பு, ஆற்றல், சிந்தனைத் திறன் மேம்படாது. சோம்பேறிகளை உருவாக்கலாம். செய்திகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய் லாப வேட்டையில் கவனம் செலுத்தும் டி.வி, கேபிள் பெருச்சாளிகள் மக்கள் இதயங்களில் குடிகொள்ளத் தவறுகின்றனர். ஆங்கில நிகழ்வுகளில் அனுபவசாலிகளை கண்டுபிடித்து தரமான குழு விவாதங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. நாட்டு நலன், ஊழல், முறைகேடு, பின்னணி, அறிவியல் வளர்ச்சி, பொது அறிவு ஆழம், அரிய காட்சிகள் நேயர்களுக்கு வழங்கப்படுகிறது. தகவல்கள் ஒளிவு மறைவின்றி பரிமாறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி முக்கிய தலைவர்கள், எதிர்க்கட்சி வி.ஐ.பிக்கள் குறித்து நேரடியாக குழு விவாதம் செய்ய யாருக்கும் துணிவில்லை. தமிழக அரசியல்வாதிகள், மாவட்ட கட்சி நிர்வாகிகள், மந்திரிகள் கடவுளுக்கு சமமாக தங்களை பாவிக்கின்றனர். செய்திகளில் நிஜம் வந்தால் கேமரா உடைக்கப்படும். பொய் வழக்கு தாக்கல் ஆகும். 1965ல் தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒழிந்து போனது. அகில இந்தியப் பார்வை, கண்ணோட்டம் சிதைந்தது. ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்கள் இலவச பெட்டிகளை வாங்கமாட்டார்கள். அவர்களின் சேனல்கள் வேறு வேறு. தமிழ்மொழியும் வளர்ந்தபாடில்லை. இலவசத் தொலைக்காட்சி பெட்டிகள் தமிழர்களின் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் உயர்வையும் கொண்டு சேர்க்காது. மாறாக வீழ்ச்சி உறுதி.

மாத இதழ் இபாதத்!

“இல்லா லியஃபுதூன்” இபாதத் செய்வதற்கென்றே மனித இனம் படைக்கப்பட்டதாக இறைமறை கூறுகிறது. 24 மணி நேரம் ஒருவர் இபாதத் மதச் சடங்கு செய்ய இயலாது. 365 நாட்கள் புரியும் அனைத்து பணிகளையும் புனித மதச்சடங்குக்கு ஒப்ப அமைத்துக் கொள்ள வேண்டும். சடங்குகளில் தொழுகை பிரதானமாகும். நிய்யத் இலக்கு மிக இன்றியமையாதது. எழுத்தாளர். படைப்பாளிக்கும் நோக்கம் தேவை. அனைத்து மக்களும் இன்புற்றிருக்க வேண்டும். தொழுகையில் தனி நபர் துதி, புகழ் கூடாது. தன்னை தாழ்த்திக் கொள்ளல் முதன்மை. இதழியலாளருக்கும் சுய புகழ், சுய தம்பட்டம் “ஜாயிஸ்” அனுமதியில்லை. ஸப் அணிவகுத்தல், தொழுகையில் அவசியம். படைப்பாளியும் தன்னையத்தவருடன் கை கோர்க்கிறார். குழுவில் இணைகிறார். தனியாக தொழுதால் பலன் குறைவு. சமூகம் வலிமை பெற ஒரே சிந்தனையுள்ள படைப்பாளிகள் ஒருங்கிணைய வேண்டும். இல்லையேல், 27 மடங்கு நட்டம் வந்து சேரும். நிமிர்தல், குனிதல், நெற்றி பணிதல், இறை வேட்டல், வலது இடது திரும்புதல் தொழுகையில் உண்டு. இபாதத் இறைவணக்க வழிபாட்டு சடங்குகளின் பல்வேறு செயல்கள். அனைத்தும் சம அந்தஸ்துடையவை. சிறுகதை, கவிதை, தலையங்கம், துணுக்கு, கட்டுரை, எதிர்வினை படைப்பாக்க வடிவங்கள். மனித மனத்தை செம்மைப்படுத்தி நேர்வழி பெறுவதே முதன்மை நோக்கு. தொழுகையாளி தான் மட்டும் தொழுதால் போதாது. எதிரில் காணும் மனித குல உறுப்பினர்களை தொழுகுமாறு வலியுறுத்த வேண்டும். தொடர்முயற்சி மரணம் வரை தொடரும். படைப்பாளியும் எழுத்தின் பிரகாசத்தை உணர்ந்து பிரச்சாரவாதியாக இயங்க வேண்டும். தலைவர், இமாம் தொழுகையில் முன் நிற்பார். இவரை முந்தக் கூடாது. தொழுகை பாழாகும். படைப்பாளியும் எடிட்டர் ஆசிரியருக்கு கட்டுப்பட வேண்டும். புறக்கணிக்கக்கூடாது. இமாமுக்கு கீழ்படிதல், இமாமை உருவாக்குதல் இரண்டு செயல்களும் ஏக காலத்தில் நடைபெறுவதாகும். படைப்பாளி ஆசிரியருக்கான அனைத்து குணங்கள், தகுதிகளையும் ஒருங்கே பெற்றவர். இருவருக்குமிடையில் எவ்விதமுன்னுரிமை, வித்தியாசமில்லை. இமாமுக்கு தெரிந்த, தெரிய வேண்டிய அனைத்து நுட்பங்களும், மஸாயில்களும் படைப்பாளிக்கும் நன்கு பரிச்சமாயிருக்க வேண்டும். விதிவிலக்கு சிறிதுமில்லை. சிறப்பு அனுமதி ஏதுமில்லை. இமாம் கிறுக்குத்தனம் செய்தால், பொறுப்பற்று செயல்பட்டால் பின் நிற்பவர் முந்த வேண்டும். பலவீனத்துக்கு இங்கு இடமில்லை. அனைவரும் இமாம். தலைமைக்கு அவசியப்பட்டால் அணிக்கு தலைமையேற்க தயார். இமாம் பதவி சாசுவதமல்ல. அதிகபட்ச தகுதியுடைவர், கூடுதல் குணப்பண்புடையோர் தென்பட்டால், எதிரில் வந்தால் இமாம் விலகி வழிவிடவேண்டும். இடம் தரவேண்டும். துர்நாற்றம் வரக்கூடாது. கழிவு சுமந்து தொழக்கூடாது. எவ்வித இரைச்சல் கூடாது. தொழுகையை போன்றே மீடியாவிலும் பொய், அவசரக்கூச்சல், புழுதிவாரி யிரைத்தல், புனைவு, அவலம், அரைகுறை தகவல் பரிமாற்றம், அவதூறு நல்ல நோக்கத்தை முறித்துவிடும். தொழுகை இபாதத் மற்றும் இதழியல் படைப்பாக்கம் இரண்டும் வெவ்வேறல்ல. அமைதி, சுபீட்ச வாழ்வு, பொது நலன், பிறர் துன்பம் களைதல், இரண்டிலும் பொது அம்சம். திருக்குர்ஆன் கூறும் இலக்கணம் தொழுகைக்கும் பொருந்தும். படைப்பாளி இயக்கத்துக்கும் சரியாகவே பொருந்தும். தர வேறுபாடு காண வேண்டாம்.
(முஸ்லிம் முரசு, Dec 2010)