Sunday, December 19, 2010

குற்றச்சாட்டுக் கட்டுரை!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

முஸ்லிம் பண்பு இருவகைப்படும் நன்மை ஏவுதல்; தீமை தடுத்தல். நல்ல பண்புகளை திணிப்பதால் பொல்லாங்கு வருவதில்லை. யாருடைய கோபம், பழி, எரிச்சல், கழுத்தறுப்பு எதிர்வராது. பத்து பைசா நட்டம் ஏற்படாது. 58 இஸ்லாமியப் பத்திரிகைகளில், இதழ்களில் பெரும்பாலானவை முதல் வகையை சேர்ந்தவை. சமுதாயம், புரவலர்களின் விரோதம் வராது. அனைவரின் ஆசிர்வாதம், புன்சிரிப்பு, துஆ, சில்லரை, பிரியாணி, வரவேற்பு எளிதில் இயல்பாக கிடைக்கும். அனுபவிக்கலாம். முன் நிபந்தனை உண்டு. சமுதாயத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. யாருடைய மனமும் புண்படக் கூடாது. மதவாதி, அரசியல்வாதி, பதவியாளர், வாசகர், வழிபாட்டுத்தல நிர்வாகி, செல்வந்தர், பாமரர், சமாதி காப்பாளர், தர்கா டிரஸ்டி ஆக அனைவரும் போற்றும் வண்ணம் கட்டுரை அமைவது, எழுதுவது மிக எளிய செயல். இறைமறை, பெரியோர் வாக்கு, நபிமொழி அடங்கிய தமிழ் நூல்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படுகின்றன. இவற்றில் 40 பக்கங்களை ஜெராக்ஸ் செய்து பிரஸ்காரரிடம் கொடுத்து ஞிஜிறி செய்யச் சொன்னால் போதும். பள்ளிவாசல் அல்லது தர்கா படம் முன் அட்டைக்கு உதவும். பத்திரிகை பெயரில் பைத்துல்மால் பணம், பொதுநிதி நாசமாகும். மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றம், நரகம், இறைக் கோபம் நிச்சயம். சில இதழ்களாவது உழைப்பில் வெளிவர வேண்டும். இதழியல் வளரும். வழிகாட்டும்.
சிறுபான்மை சமுதாயம் வேகமாக முன்னேறுவதற்கு தடைகள் போகிற போக்கில் எழுதப்படுகிறது. முஸ்லிம் விரோத அரசாங்கம், இந்துக்களுக்கு முக்கியத்துவம், ஆர்எஸ்எஸ் மனோபாவம், பிராமண ஆதிக்கம், வறுமை திணிப்பு, உரிமை மறுப்பு காரணங்கள் கடந்த 60 ஆண்டுகளாக, நாடு விடுதலைபெற்ற பின்னரும் மேற்கோள்காட்டப்பட்டன. சிறுபான்மை சமுதாய நோய், புற்று, சீழ், புண், பலவீனம் தொடர்ந்து மறைக்கப்பட்டது. 40,000 கோடி ரூபாய் வக்பு சொத்து முடக்கம், ஆடம்பர திருமணம், 30,000 கோடி ரூபாய் கல்வி நிறுவன குடும்ப ஆதிக்கம், இஸ்லாமிய இயக்க தீவிர குடுமிபிடி சண்டை, அரபு பணம் வரவு விசாரணை இருட்டடிக்கப்பட்டது. 40 லட்சம் தமிழக முஸ்லிம்களில் ஐந்து லட்சம் பேர் தீயவர்கள். இத்தகைய விஷமிகள், கொடூரமானவர்களின் ஆதிக்கத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தின் ஏளனத்துக்குள்ளாகிறது. இந்துக்கள் அருவெறுப்படைகின்றனர். சமுதாய வளர்ச்சிக்கு பெரும் இடையூறு விளைவிப்பவர்களை அடையாளம் காட்டுவது எழுத்தாளரின் முதல், மகத்தான, அவசிய, தவிர்க்க இயலா, சமூகக் கடமை. தனி நபர் அவதூறு, தாக்குதல், பரிகசிப்பு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கட்டுரைகளில் பிரசுரமாகியிருந்தால் எழுத்தாளர் நரகவாதி. சமுதாய உயர்வு குறித்த கண்ணீர், உழைப்பு, முனகல், கலக்கம், தகவல், புள்ளி விவரம், ஏக்கம், பெருமூச்சு, நிதானம், பொறுப்பு, போதாமை கட்டுரையில் அடிநாதம். இறையருள் பூரணமாக எழுத்தாளருக்கும் கிடைக்கும். மனம் திருந்தும் சமுதாயத்துக்கும் உண்டு. வதன் ஹவ்ன அனில் முன்கர் ‘‘அல்லவை விலக்கல்’’ தொடரும். மனத்தூய்மையுடன் வரவேற்போம். இறுதி இலக்கு, தமிழகத்தில் தன்னிறைவு பெற்ற சமுதாயம் உருவாகும்.

No comments:

Post a Comment