Sunday, December 19, 2010

நவீன ஹைதரபாத்

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

பாரதநாட்டின் அடிப்படைக் கட்டமைப்பில் ஆன்மீகம், இறையியல் பங்கு தவிர்க்க இயலாதது. பாக்கிஸ்தான் ஆன்மீக பாடல் கலைக் குழு ஹைதராபாத் நகருக்கு வருகை தந்தது. இறை வல்லமை, இறைவனுக்கும் மனிதனுக்குமான நெருக்கம், உலகின் நிலையாமை, யாக்கை அழிவு, ஆன்ம ஒழுக்கம் ததும்பும் பாடல்கள். இரைச்சல் தரும் ஆங்கில, மேற்கத்திய இசைக் கருவிகள் எதுவுமில்லை. ஒன்றிரெண்டு பாரம்பரிய எளிய, மண்ணுக்கேற்ற இசைக்கருவிகள்.
ஆன்மா, இதயம் உயிர்த்தெழும் இலக்கிய வரிகள். உருது மொழிக்கே உரிய செம்மொழி முதன்மை பண்புகள், சொல்லாடல்கள். உலகின் எந்த மொழியிலும் மாற்ற இயலா, பெயர்க்க முடியாத திமிர்த்தன இலக்கிய ஆளுமை. கஜல், கவ்வால், நாத், கீத், ஷமா, கானா மூவாயிரம் ரூபாய் நுழைவு கட்டணம் உருது மொழியின் ஆதிக்கத்துக்கு சான்று. பார்வையாளர்களில் இந்துக்கள் பெரும்பான்மை. நபிகளாரின் புனிதம் பலபாடல்களின் மையக்கருத்து. புர்கா பெண்கள் குடும்பத்துடன் அவையை நிறைத்தனர். நாட்டு எல்லை, தேசப் பிரிவினை, மொழிப் புலமையின் முன் மறைந்தது. திறமை, ஆர்வம், இலக்கிய ரசனை மனிதப் பண்பு மட்டுமே அரங்கத்தில் கோலோச்சியது. ஆந்திரப் பிரதேசம் நிறுவப்பட்ட நாள், மாநில முதல்வர் 35,000 கோடி ரூபாய் ஆண்டு அந்நிய முதலீடு பெருமை மிகு விளம்பரம் நாளிதழ்களில். இன்னும் 40,000 கோடி ரூபாய் சில வாரங்களில் வந்து சேரும்.

தென்னிந்தியாவின் மக்கள் அடர்த்திமிகு நகரம் ஹைதராபாத். 1591ல் முஹம்மது குலிகுதுப் மூசி ஆற்றின் கரையில் உருவாக்கிய நகரம் பாக்ய நகரம் எனவும் வரலாற்றில் புகழப்படுகிறது. 650 கி.மீ-. பரப்பில் 63 லட்சம் மக்களை வாழவைக்கிறது. 55 சதவீதம் இந்துக்கள், 41 சதவீதம் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்களும் மன நிறைவுடன் காலங்கழிக்கின்றனர். ஹைதராபாத் பகுதியில் தீவிரவாதி தலைமறைவு, வெடிகுண்டு புதையல் கண்டுபிடிப்பு பொய்ச்செய்திகள், அவதூறு தகவல்கள் தொடர்ந்து ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது வாடிக்கை. ஆனால் பாக்கிஸ்தான் ஆன்மநேய கலைக்குழுவின் ஹைதராபாத் நிகழ்ச்சியை ஆங்கில நாளிதழ்கள் மனமார பாராட்டின. நேர்காணல் வெளியிடப்பட்டது. தகவல் தொழில் நுட்பம், மருந்து தொழிற்சாலை, நுண்கருவிகள், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பூரண அமைதி நகரமாக வளாகங்கள் உருவாகின்றன. இந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கு ஹைதராபாத் சிறந்த முன்னுதாரணம். பாக்கிஸ்தான் என்றாலே அருவெறுப்பு, அராஜகம், தீவிரவாதம், பயங்கரவாதம், ராணுவ வெறி, ஆயுதக் கலாச்சாரம், முரட்டு மதவாதம் பொய் புனைவு கற்பனைக்கு ஹைதராபாத் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இலக்கியம், மொழி, மேற்கத்திய மறுப்பு, மண்ணுக்கேற்ற இசை, ஆன்மீகப் பண்புகளை ஹைதராபாத் வாசிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் வாழும் 30 லட்ச முஸ்லிம்கள் மத நல்லிணக்கக் காவலர்கள். மறுப்பதற்கில்லை. நவீன இந்தியாவின் முன்னுதாரணக் குடிகள்.

No comments:

Post a Comment