Sunday, December 19, 2010

இலவசத் தொலைக்காட்சி பயன்தருமா?

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

ஊடகம், மக்களுக்கு தகவல் தொடர்பில் சிறப்பான இணைப்பை ஏற்படுத்துகிறது. மாதம் நூறு ரூபாய் சந்தா கேபிள் இணைப்புக்கட்டணம், மின்செலவு, நேரம் வீணடிப்பு அன்றாட வாழ்வில் இடம்பிடிக்கிறது. ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாமல் டிவியை பயன்படுத்த இயலாது. தமிழகத் தனியார் தொலைக்காட்சி நிகழ்வுகள் அகில இந்தியத் தரம், சர்வதேசத் தரத்துடன் போட்டியிடும் தகுதியற்றவை. வெறுமனே இளம்பெண், வாலிபர் கூட்ட இடுப்பு ஒடியும் நடனம் மார்பு தொடு நடனம் தமிழர்களின் வாழ்வை எந்நாளும் உயர்த்தாது. 24 மணி நேரச் செய்தி சேவை அபத்தமானது. செய்தி சேகரிக்க, பரிமாற துணிவு தேவை. ஆளும் கட்சி ஜால்ரா, குற்றச்சாட்டு, பகை என செய்தி தடுமாறுகிறது. பரபரப்பு தேடி மீடியா அலைவதால் நம்பிக்கையிழக்க வேண்டியுள்ளது. மக்கள் கூடும் சகல, அனைத்து நிகழ்வுகளும் படம் பிடிக்கப்படுவதில்லை. நிருபருக்கு ஆர்வமுள்ள கூட்டம், மீடியா அதிபருக்குத் தேவையான நிகழ்வு மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. பணம் கொடுத்தால் செய்தியை சில நிருபர்கள் வலிந்து ஒளிபரப்புகின்றனர். ஒரே வகையான செய்தி இருபது சேனல்களில் சலிப்பின்றி 24 மணி நேரம் இடம்பிடிக்கிறது. 24 மணி நேர செய்தி சேகரிப்பு நடைபெறவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட செய்தியை திருப்பித் திருப்பி ஒளிபரப்புகின்றனர். பாமர மக்கள் இன்றைய தொலைக்காட்சி நிகழ்வுகளால் பெரிய பலனை பெற வாய்ப்பில்லை. சினிமா, நகைச்சுவை, வன்முறை சண்டைக் காட்சிகள் 24 மணி நேரமும் காணக் கிடைக்கிறது. இதனால் உழைப்பு, ஆற்றல், சிந்தனைத் திறன் மேம்படாது. சோம்பேறிகளை உருவாக்கலாம். செய்திகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய் லாப வேட்டையில் கவனம் செலுத்தும் டி.வி, கேபிள் பெருச்சாளிகள் மக்கள் இதயங்களில் குடிகொள்ளத் தவறுகின்றனர். ஆங்கில நிகழ்வுகளில் அனுபவசாலிகளை கண்டுபிடித்து தரமான குழு விவாதங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. நாட்டு நலன், ஊழல், முறைகேடு, பின்னணி, அறிவியல் வளர்ச்சி, பொது அறிவு ஆழம், அரிய காட்சிகள் நேயர்களுக்கு வழங்கப்படுகிறது. தகவல்கள் ஒளிவு மறைவின்றி பரிமாறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி முக்கிய தலைவர்கள், எதிர்க்கட்சி வி.ஐ.பிக்கள் குறித்து நேரடியாக குழு விவாதம் செய்ய யாருக்கும் துணிவில்லை. தமிழக அரசியல்வாதிகள், மாவட்ட கட்சி நிர்வாகிகள், மந்திரிகள் கடவுளுக்கு சமமாக தங்களை பாவிக்கின்றனர். செய்திகளில் நிஜம் வந்தால் கேமரா உடைக்கப்படும். பொய் வழக்கு தாக்கல் ஆகும். 1965ல் தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒழிந்து போனது. அகில இந்தியப் பார்வை, கண்ணோட்டம் சிதைந்தது. ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்கள் இலவச பெட்டிகளை வாங்கமாட்டார்கள். அவர்களின் சேனல்கள் வேறு வேறு. தமிழ்மொழியும் வளர்ந்தபாடில்லை. இலவசத் தொலைக்காட்சி பெட்டிகள் தமிழர்களின் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் உயர்வையும் கொண்டு சேர்க்காது. மாறாக வீழ்ச்சி உறுதி.

No comments:

Post a Comment